முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதவானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதோடு ,அரசாங்கத்தின் அமைச்சர்ஒருவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதவானுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த அரசின் சட்ட ஆட்சி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளரும் எம்.பி.யுமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஜே.வி.பி. யின் காட்டு நீதிமன்ற செயற்பாடுகளை நாங்கள் அறிவோம். இந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்தவா இப்போது முயற்சிக்கின்றார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமைஇடம்பெற்ற தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மீதான விவா கேள்வி எழுப்பிய அவர்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெறாமலேயே அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், சாட்சியாளர்களுக்கு எதிராகவும் செயற்பட்டால்தான் பிணை வழங்கல் மறுக்கப்படும்.
ரணில் விக்கிரமசிங்க பிரபல்யமானவர். அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகியிருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே செயற்பட்டார்.
பிணைமறுப்புக்கு முறையான காரணிகள் ஏதும் இல்லாத நிலையில்தான் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மோசடி வழக்கு தொடர்பில் இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பொலிஸார் அந்த அமைச்சரை கைது செய்யவில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நீதிமன்ற கட்டமைப்பில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை நீதிச்சேவை ஆணைக்குழு நியாயமான முறையில் முன்னெடுத்தது.
நீதிபதிகளுக்கான பதவி உயர்வு சிரேஷ்டத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது. நேர்முகப்பரீட்சைகள் எதுவும் இடம்பெறவில்லை.
கடந்த 75 ஆண்டுகளாக இவ்வாறான முறைமையே காணப்பட்டது. அரச நிர்வாக சேவை உள்ளிட்ட உயர் அரச பதவிகளுக்கான பதவிஉயர்வு சிரேஷ்டத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டது.
அண்மையில் 17 நீதவான்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில்வைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதவானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவானுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இது தான் இவர்களின் சட்டத்தின் ஆட்சியா?அரசாங்கம் நீதிமன்ற கட்டமைப்பில் தலையிடுகிறது.
பெரும்பாலான நீதிபதிகள் தூரப்பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜே .வி.பி.யின் காட்டு நீதிமன்ற செயற்பாடுகளை நாங்கள் அறிவோம்.
கடந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் இவர்கள் செயற்பட்டார்கள். இந்த நிலைமையை ஏற்படுத்தவா இப்போது முயற்சிக்கின்றார்கள் ? அரகலயவின் போது அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
அன்று அவர்களுக்கு பிணை வழங்கியவர்களிடம் தான் நீதிச்சேவை ஆணைக்குழு இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடக்கூடாது என்றார்.